சென்னை: பைக்குகளை சென்னையில் திருடி, திருவண்ணாமலையில் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொளத்தூர், அஞ்சுகம் நகர் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஜெயபாரதி (34).
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ம் தேதி இரவு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது பைக் திருடுபோனது. இது தொடர்பாக ஜெயபாரதி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த ஜெகதீஷ் (19) என்பவர் 2 சிறுவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் ஜெயபாரதியின் பைக்கை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி ஜெகதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கூட்டாளிகளான 2 சிறுவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடி அதை திருவண்ணாமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, ஜெகதீஷ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.