கோப்புப் படம்
சென்னை: குறைந்த விலையில் தங்கம் தருவதாக பண மோசடி நடைபெற்ற விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த மோசடியில் போலீஸ் அதிகாரிகளும் பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர் ஷீலா மேரி. இவர் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
குறைந்த விலையில் தங்கக் காசுகள் வாங்கித் தருகிறோம் என்பன உள்பட 3 வகையான நகை முதலீட்டு திட்டங்களை உறவினரான பிரபு மணி மூலமாக அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல்துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவை தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார்.
இதனால் நம்பிக்கை ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீஸாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபு மணி தலைமறைவாகி விட்டார். இதனால், இவரிடம் சுமார் ரூ.20 கோடி வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பிரபு மணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சென்னை போலீஸாரும் தனியாக விசாரித்து வருகின்றனர்.