திருப்பூர்/உடுமலை: உடுமலை அருகே வெனசப்பட்டி கிராமத்தில் சிமெண்ட் மேற்கூரை தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.
இங்குள்ள தங்கும் விடுதியில் மதுபோதையில் இருந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டுள்ளனர். அப்போது உடன் தங்கியிருந்த உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் சப்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. இதில் ஒடிசாவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்கினர்.
இதில் சல்மான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 பேர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உடுமலை போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் கடம்படத்தைச் சேர்ந்தவர் அமித்நாக் (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானராஜன் மகாகுட் (22). சுபர்னபூர் மாவட்டம் சோனேப் பூரை சேர்ந்தவர் சந்தன் பாரிக் (27).
இவர்கள் மூன்று பேரும் குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி, வேலை செய்தனர். நேற்று முன் தினம் இரவு மூவரும் தாங்கள் தங்கியிருந்த அறையில் மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஞானராஜன் மகாகுட், சந்தன் பாரிக் ஆகியோர் மது பாட்டிலால், அமித்நாக்கை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குன்னத்தூர் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஞானராஜன் மகாகுட், சந்தன் பாரிக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.