சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருவான்மியூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
அவரது காருக்கு முன்னும், பின்னும் காவல் துறையின் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அவரது கார், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே செல்லும்போது பைக் ஒன்று திடீரென அத்துமீறி நுழைந்து ஆளுநர் காரை பின் தொடர்ந்து சென்றது.
ஆளுநருக்கு பாதுகாப்புக்காக சென்ற காவல் துறை வாகனங்களையும் முந்திச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.
ஆனால் இருவரும் பைக்கில் வேகமாக சென்றதால், போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீஸார் ஆளுநர் மாளிகை முன் நின்று கொண்டிருந்த போலீஸாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து அந்த பைக்குகளை பிடிக்க உத்தரவிட்டனர். அதன்படி அத்துமீறிய இருவரையும் போலீஸார் பிடித்து, கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புராஜ் (22), விழுப்புரத்தைச் சேர்ந்த ஜீவா (22) என்பதும், இருவரும் பெருங்களத்தூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும், விடுமுறை தினம் என்பதால் அடையாறுக்கு வந்ததும், அங்கிருந்து மது அருந்திவிட்டு பெருங்களத்தூருக்கு புறப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் போலீஸாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக ஆளுநர் வாகன அணிவகுப்புக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதும், ஆளுநர் வாகன அணிவகுப்புக்குள் சுமார் அரை கிலோ மீட்டர் பயணித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.