சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 3.1 கிலோ மெத்தம் பெட்டமைனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட போலீஸார் போதைப் பொருள் விற்பனைக் கும்பலை தீவிரமாகக் கண்காணிக்கின்றனர். இந்நிலையில் சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிவபிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், சிவகங்கை நகர் போலீஸார் அங்கு நேற்று சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த இளையான்குடி புதூரைச் சேர்ந்த ரசூல்தீன் (35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபு என்ற சகுபர் சாதிக் (26), திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (28), முகமதுரபீக் என்ற பாபு (30) ஆகியோரிடம் செயற்கை உயர்ரக போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் 3.1 கிலோ இருந்தது. இதன்சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி. இதைத் தொடர்ந்து போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார் 4 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், மெத்தம் பெட்டமைனை மலேசியா நாட்டுக்கு கடத்தவிருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை ஆய்வு செய்ததில் அவர்கள் பல ஆண்டுகளாக போதைப் பொருட்கள் கடத்தலில் ‘குருவிகளாக’ செயல்பட்டு வந்ததும், தமிழகம் முழுவதும் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுடன் இணைந்து போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.