ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயில் கொலை, கொள்ளை வழக்கில் தப்பியோட முயன்ற நாகராஜுவை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் இரவு நேரக் காவலாளிகள் இருவர், பகல் நேரக் காவலாளியாக ஒருவர் என 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு காவலாளிகள் பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் பணியில் இருந்தனர். செவ்வாய்க்கிழமை காலை பகல் நேரக் காவலாளி மாடசாமி கோயிலுக்குச் சென்ற போது, கொடிமரம் அருகே 2 காவலாளிகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சேத்தூர் போலீஸார் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு, கேமரா பதிவு உள்ள டிவிஆர் திருடப்பட்டிருந்தது. மேலும், உண்டியல் காணிக்கை மற்றும் கோயிலில் இருந்த குத்துவிளக்குகள் திருடப்பட்டிருந்தன. மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்.பி. கண்ணன் ஆகியோர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து டிஎஸ்பி.க்கள் ராஜா, பஷீனா பீவி, ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையில், கொள்ளை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எடுப்பதற்காக நாகராஜை போலீஸார் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு, நாகராஜ் தப்ப முயன்றார்.
உடனே காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், நாகராஜின் காலில் சுட்டுப் பிடித்தார். பின்னர், காயமடைந்த நாகராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், காயமடைந்த உதவி ஆய்வாளரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அப்பாவி போல நடித்து போலீஸாரை ஏமாற்றிய நாகராஜ்: தேவதானம் கோயிலில் நடந்த கொலை, கொள்ளை குறித்த தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நாகராஜும், பொதுமக்களோடு சேர்ந்து அப்பாவி போல் நின்று கொண்டு, ‘‘குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும்’’ எனக் கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாகராஜ் மீது ஏற்கெனவே வழிப்பறி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், சேத்தூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.