ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயிலில் நடந்த திருட்டு முயற்சியில் கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஒருவரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் புராதான சிறப்புமிக்க நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு காவலாளிகள் பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர். மேலும் கோயிலில் இருந்த சில சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவுகளையும் எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
முன்னதாக நேற்று எஸ்பி அளித்த பேட்டியில், “முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் குற்றவாளிகள் என அடையாளம் தெரியவந்துள்ளது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.” என்று கூறியிருந்தார்.
அதன்படி, நேற்று இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக அவரை சம்பவ இடத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு குற்றவாளி தப்ப முயன்றார். உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த குற்றவாளியை மீட்ட போலீஸார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.