தென்காசி: இலஞ்சியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் செல்போனை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று முன்தினம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
தென்காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்தில் தேர்வர் ஒருவர் செல்போனை பயன்படுத்தியதை, தேர்வு அறை கண்காணிப்பாளர் கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். குற்றாலம் போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர், சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்பது தெரியவந்தது.
அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வினாத்தாளின் பக்கங்களை செல்போன் மூலம் போட்டோ எடுத்து, அவற்றை வாட்ஸ் அப் மூலம் சிவகிரியை சேர்ந்த தனது நண்பர்கள் பாண்டியராஜ் (23), மல்லிகா (22) ஆகியோருக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து பதில்களை பெற்று விடையளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. ஆனால், பதில்களை அனுப்பும் முன்பே இந்த முறைகேட்டை தேர்வு அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து, கோபிகிருஷ்ணனை பிடித்துள்ளார்.
3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியதில், கோபி கிருஷ்ணனின் நண்பரும் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்றவருமான பிரதீப் (31) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.
தேர்வர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், கோபிகிருஷ்ணன் எப்படி தேர்வு மையத்துக்குள் செல்போனை கொண்டு சென்றார் என்பது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம், காவல்துறை அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், பணியில் மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தென்காசி எஸ்.பி. தெரிவித்தார்.