திருச்சி: திருச்சியில் இளைஞர் ஒருவர் காவலர் குடியிருப்புக்குள் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது.
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 8.20 மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக வந்து அவரை ஐந்து பேர் கும்பல் அரிவாளுடன் வெட்ட துரத்தியது. அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றார். அவரை துரத்திச் சென்ற கும்பல் பீமா நகர் காவலர் குடியிருப்பு வாசலில் அவரை மறித்து வெட்டியது.
வெட்டுப்பட்ட தாமரைச் செல்வன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு காவலர் குடியிருப்புக்குள் உள்ளே ஓடினார். ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டுக்குள் ஓடினார். அவரைப் பின் தொடர்ந்து ஓடிய கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது. இதில் தாமரைச் செல்வனின் தலை துண்டானது.
வீட்டுக்குள் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அப்போது காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றதில் ஒருவன் சிக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
கோட்டை உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலி சார் விசாரணையில் பிடிபட்டவர் இளமாறன் என தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுற்றுலா மாளிகையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கி உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள நிலையில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.