சென்னை: தனியார் உணவு டெலிவரி ஊழியர் மற்றும் லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவொற்றியூர் மாட்டு மந்தை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (30).
தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி அதிகாலை உணவு டெலிவரி செய்துவிட்டு, கன்னிகாபுரம், பவானி அம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், முருகனை கத்திமுனையில் வழிமறித்து மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பினார்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (18) என்பது தெரிந்ததால், அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (50) என்பவர் வியாசர்பாடியில் தங்கி லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவரிடமும் கடந்த 8-ம் தேதி கத்திமுனையில் வழிப்பறி நடைபெற்றது. இச்செயலில் ஈடுபட்ட வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற சாரதி (30) மற்றும் அவரது கூட்டாளி பூவரசன் (26) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.