சென்னை: அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு என சென்னையில் 7 இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், “கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்தை வெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர் நிகழ்வு: இதைத் தொடர்ந்து போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட 7 இடங்களிலும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விரைந்து சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகும் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே அந்த மின்னஞ்சல், வதந்தியை பரப்பும் நோக்கத்தில் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.