கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாய் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரு பெண் குழந்தைகளும், துருவன் என்ற 5 மாத கைக் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துருவன் பால் குடிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸார், சுரேஷிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது வேறு எதுவும் பிரச்சினை இல்லை என கூறினார். இதையடுத்து, உடற்கூராய்வு செய்யாமல் குழந்தையின் உடலை கொடுத்து அனுப்பினர். இந்நிலையில், பாரதி வைத்திருந்த 2 செல்போனில் ஒன்றை வாங்கி சுரேஷ் பார்த்தபோது, பாரதி ஒரு பெண்ணுடன் தன்பாலின உறவில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள், உரையாடல் ஆடியோ இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக பாரதியிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் சுமித்ரா (20) என்பவருடன் 4 ஆண்டுகளாக உறவில் இருப்பதாகவும், இதற்கு இடையூறாக இருந்த துருவனை கொல்ல சுமித்ரா கூறியதால், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, பாரதி மற்றும் சுமித்ராவை கைது செய்தனர்.