க்ரைம்

போக்சோ வழக்குகளில் இழப்பீட்டை அதிகரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷர்மிளா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”போக்சோ வழக்குகளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பிடுகையில் என்ஏஎல்எஸ்ஏ (தேசிய சட்ட உதவிகள் ஆணையம்) இழப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை விட குறைவாக உள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வதிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாப்பு மற்றும் மீள் நடவடிக்கைக்காக இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியாக இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம்.

தற்போது பிற குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ஏஎல்எஸ்ஏ திட்டத்தின் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மாநில இழப்பீட்டு தொகையை விட 20 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. இந்த அளவுக்கு போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு தொகையையும் அதிகரிக்க வேண்டும்.

இது தொடர்பாக போக்சோ வழக்குகளில் என்ஏஎல்எஸ்ஏ திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச, அதிகபட்ச இழப்பீட்டு அளவு கோலை பின்பற்ற வேண்டும் என அனைத்து போக்சோ வழக்குகளுக் கான சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக சமூக நலத் துறை செயலாளர், இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் டிஜிபி, மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT