சென்னை: ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நகைப்பட்டறை பெண் உரிமையாளரின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் வசிப்பவர் பிரியங்கா (30). சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வரும் இவருக்கு மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரில் ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனை இருந்தது. இதை சிலர் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரியங்கா புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பிரியங்காவுக்கு சொந்தமான சொத்தை போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்தது கொளத்தூர், பூம்புகார் நகர், 8-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.