ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தொழிலாளர்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் கைது செய்யப்பட்டார். ஓசூர் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி லாளிக்கல் பகுதியில் உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்சியர் அக்ரிதி சேத்தி மற்றும் எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் விசாரணை நடத்தினர். பதற்றமான சூழல் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
விசாரணையில், அங்கு தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சக தொழிலாளி நீலுகுமாரி குப்தா (22) என்பவர் ரகசிய கேமராவைப் பொருத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தொழிலாளர்கள் தர்ணாவைக் கைவிட்டனர். இதையறிந்த பெண் தொழிலாளர்களின் பெற்றோர் வெளி மாவட்டங்களிலிருந்து நேற்று காலை விடுதிக்கு வரத் தொடங்கினர்.
விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களிடம் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியை காலி செய்துவிட்டு, தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி சங்கர் கூறும்போது, “கேமரா பொருத்தப்பட்ட 30 நிமிடங்களில் அகற்றப்பட்டுவிட்டது.
அதில் வீடியோ எதுவும் பதிவாகவில்லை. வேறு அறைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று 100-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார். இதனிடையே மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் யாரும் பரப்பக் கூடாது” என்று எச்சரித்துள்ளனர்.
ஆண் நண்பர் கைது: இந்நிலையில், கைதான நீலுகுமாரி குப்தாவிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் பணிபுரியும் அவரது ஆண் நண்பர் சந்தோஷ் என்பவரின் ஆலோசனைப்படி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து, பெங்களூரு சென்ற போலீஸார் நேற்று மாலை சந்தோஷை கைது செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஓசூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மேலும், விடுதி வார்டன் சரிதாவிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.