கோவை: கோவை பீளமேடு பிருந்தாவன் நகர்பகுதியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி குணமடைந்ததும் குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கூடுதல் விசாரணை அதிகாரியாக துடியலூர் ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரையும் அவர்களின் காலில் சுட்டு போலீஸார் பிடித்துள்ளனர். காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸார் கைது செய்ய வந்தபோது என்ன நடந்தது, எத்தகைய சூழலில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பது குறித்து கோவை வடக்கு ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இதையொட்டி, மருத்துவமனையில் மூவரிடமும் அவர் நேற்று விசாரணை மேற்கொண்டார்.