பெரம்பலூர்: நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், விவசாயி. இதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லதா. இவர் கணவர் உயிரிழந்துவிட்டதால் தந்தை வீட்டில் வசித்தார்.
அரசன் மற்றும் லதா குடும்பங்களுக்கு இடையே நிலப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு நிலம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது லதா(30), இவரது தந்தை ராஜேந்திரன் (57), சகோதரர்கள் அறிவழகன் (28), கார்த்திக் (25) ஆகியோர் சேர்ந்து அரசனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அரசன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து லதா உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
ரூ.1,000 அபராதம்: இதுதொடர்பான வழக்கு விசாரணை, பெரம்பலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் ஆஜரானார்.