சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் மூதாட்டி, இளைஞர் உயிரிழந்தனர். தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் (47). இவர் இருசக்கர வாகனத்தில் ஆயிரம் விளக்கிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி அண்ணா சாலை வழியாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அண்ணா மேம்பாலத்திலிருந்து இறங்கும்போது, திடீரென அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கணேஷ் குமார் பலத்த காயமடைந்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கணேஷ் குமாரை மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கேயே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் நிகழ்விடம் விரைந்து, கணேஷ் குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், நேற்று முன்தினம் மாலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டிகள் இருவர் மீது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இதில், செல்லம்மாள் (78) என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், நாகரத்தினம் (72) என்ற மற்றொரு மூதாட்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈசிஆரில் விபத்து: ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணமூர்த்தி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள நீலாங்கரை போலீஸார், சொகுசு காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியகாரின் கண்ணாடியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.