சென்னை: புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற இருந்த கொலையை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை கைது செய்தனர். திருவொற்றியூர், டி.எச்.ரோடு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் 4 பேர் பதுங்கியிருப்பதாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீஸார் 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நண்பர்களுடன் கொலை திட்டம்: விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவரை கொலை செய்ய 4 பேரும் திட்டமிட்டு, பதுங்கி தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ்வரன் (20), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (20), பார்த்திபன் (22) மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், “கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாயாண்டி என்ற மனோஜ்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் தேவா என்பவரின் உறவினர்தான் தீபக். இவர் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் ஆதரவாளரான லோகேஷ்வரன் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘நீயும் என்னிடம் சீக்கிரம் சிக்கப் போகிறாய்’ என ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனால் லோகேஷ்வரன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தீபக்கை கொலை செய்யத் திட்டமிட்டது தெரியவந்தது.
லோகேஷ்வரன் மீது 9 வழக்குகளும், ஜெயராஜ் மீது 3 வழக்குகளும், பார்த்திபன் மீது 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.