சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில், தொழில் அதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பெருங்குடியில் வசிப்பவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் வர்த்தக முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்தார்.
அதில், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திக், அவர்கள் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அதில் கூறப்பட்ட வாட்ஸ்-ஆப் குழு ஒன்றில் இணைந்தார்.
அந்தக் குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று மோசடி நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி, அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ.1.43 கோடி செலுத்தினார்.
அவர் செலுத்திய பணத்துக்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி பேர்வழிகள் அந்த செயலியில் காட்டியுள்ளனர்.
அதன்பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும்பணம் கேட்டு வற்புறுத்தினர்.இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக், இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ் (50), முன்னாள் வங்கி மேலாளர் மேற்கு சைதாப் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்திராஜ் (43) ஆகியோரை கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் (29), திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (33) ஆகிய மேலும் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.