சென்னை: எப்போதும், செல்போனும் கையுமாக இருந்த மாணவிகளை பெற்றோர் கண்டித்ததால் தோழிகளான மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் தி.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தோழிகளான இருவரும் கடந்த அக்.25-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை யாரேனும் கடத்திச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். இதனிடையே, மாமயமான மாணவிகள் இருவரும் புனித தோமையர் மலை (பரங்கிமலை) ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் 2 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் இரு சிறுமிகளும் வீட்டில் செல்போன்களை வெகு நேரமாக பயன்படுத்தி வந்துள்ளதும், இதனை பெற்றோர் கண்டித்ததால் இருவரும் கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மீட்கப்பட்ட 2 சிறுமிகளும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைந்து செயல்பட்டு மாயமான சிறுமிகளை விரைவாக மீட்ட போலீஸாரை பெற்றோரும் மற்றும் உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.