ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தற்கொலை செய்துகொண்ட தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் உள்ள வடக்கு பூந்தோட்டத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(37). இவரது மனைவி பிரியங்கா (30). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் தாராஸ்ரீ(7) தமிழிசை(5) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது இரு குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறிச் சென்ற கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என பெரியகுளம் காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த பெரியகுளம் போலீஸார், காணாமல் போன கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது இரு குழந்தைகளை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழந்தைகள் இருவரின் உடல் நேற்று காலை ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்த்தேக்கத்தில் மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மிதந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.
மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை தனது இரு குழந்தைகளுடன் வைகை அணை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.