அஜித்ராஜ் 
க்ரைம்

தந்தையின் 16-ம் நாள் காரியத்துக்காக ரவுடி நாகேந்திரனின் இளைய மகனுக்கு ஒருநாள் பரோல்

செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அண்மையில் உயிரிழந்தார். இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நாகேந்திரனின் மகன்களான அஸ்வத்தாமன், அஜித்ராஜ் ஆகியோருக்கு தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மூன்று நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நாகேந்திரனின் 16-ம் நாள் காரியம் வரும் அக்.26- தேதி நடைபெறவுள்ளதால் சிறையில் உள்ள அவருடைய இளைய மகன் அஜித்ராஜூக்கு 2 நாட்கள் பரோல் வழங்கும்படி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்ராஜூக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என அரசு தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், அஜித்ராஜூக்கு அக்.26-ம் தேதி ஒருநாள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமனுக்கு ஏற்கெனவே அக்.28 வரை இடைக்கால ஜாமீ்ன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT