விஷ்ணு 
க்ரைம்

மல்லிப்பட்டினம் அரசு பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20). இவர் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகைக்காக விடுமுறைக்கு ஊருக்கு வந்த விஷ்ணு, வியாழக்கிழமை மாலை நேரத்தில் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை விஷ்ணு, அவர் படித்த மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் பள்ளி சுவற்றில் என் சாவுக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சேது பாவாசத்திரம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா ? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுவற்றில் எனது சாவுக்கு காரணம் பாபு என்று எழுதப்பட்டிருந்த நிலையில், பாபு என்பவர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவர் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்ததால், அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பள்ளியில் கடந்த ஆண்டு தற்காலிக ஆசிரியை ஒருவர், வகுப்பறையில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT