சென்னை: மாஞ்சா நூல் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால் மாஞ்சா நூல் பட்டம் தயா ரிப்பதற்கும், விற்பதற்கும் சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை, ராமானுஜம் தெருவிலுள்ள வீட்டின் மொட்டை மாடியில் சிலர் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டம் விடுவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு மாஞ்சா நூல் பயன்படுத்தி, பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த அன்பழகன் (23), குமரவேல் (31), புதுவண்ணாரப்பேட்டை சலீம் (41) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4 பட்டங்கள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், புதுவண்ணாரப்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டம் பகுதியில் மாஞ்சா நூலினால் ஆன பட்டத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்த தண்டையார்பேட்டை வெற்றிவேல் (24), புது வண்ணாரப்பேட்டை சதீஷ் (24) ஆகிய மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 பட்டங்கள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.