கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொலை செய்த 14 வயது மகனை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குணசேகரனுக்கு மதுப் பழக்கமும் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதேபோல, கடந்த 19-ம் தேதியும் குணசேகரன் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், மனைவி மகேஸ்வரியை தாக்கியுள்ளார். பின்னர் குணசேகரன் வெளியே சென்ற நிலையில், மகேஸ்வரி தனது 14 வயது மகனிடம், “உனது தந்தை என்னை அடித்தபோது ஏன் வேடிக்கை பார்த்தாய்? நீ உனது தந்தைக்கு ஆதரவாக இருக்கிறாயா?” என்று கேட்டு, அவரை அடித்துள்ளார். பின்னர் மகேஸ்வரி வயலுக்குச் சென்றுவிட்டார்.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரைத் தேடினர். அப்போது அருகில் இருந்த விவசாய நிலத்தில் மகேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருநாவலூர் போலீஸார் மகேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனையில், மகேஸ்வரி கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்ததில், மகேஸ்வரியின் 14 வயது மகன் அவரைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் அந்த சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
தாய் தன்னை அடித்ததால் கோபமுற்று, வயல்வெளியில் அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். பின்னர் அந்த சிறுவனைக் கைது செய்த போலீஸார், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.