காரைக்கால்: படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக தனது மகளுடன் பயின்ற சக மாணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன்(48)- மாலதி(40). இவர்களது மகன் பாலமணிகண்டன்(13). நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பாலமணிகண்டன் முதன்மையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், 2022 செப். 2-ம் தேதி நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய பாலமணிகண்டனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அப்போது பெற்றோர் விசாரித்ததில், உறவினர் கொடுத்து அனுப்பியதாக பள்ளிக் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை பருகியதில் இருந்து வாந்தி ஏற்பட்டு வருவதாக பாலமணிகண்டன் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாயான, காரைக்காலைச் சேர்ந்த சகாயராணி விக்டோரியா(46), பால மணிகண்டனின் உறவினர் கொடுத்ததாகக் கூறி, பள்ளிக் காவலாளி தேவதாஸிடம் குளிர்பானம் வழங்கிச் செல்வது தெரியவந்தது. இதனிடையே, மருத்துவமனையில் செப். 3-ம் தேதி இரவு பாலமணிகண்டன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக காரைக்கால் நகர போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பாலமணிகண்டனுக்கும், சக மாணவி ஒருவருக்கும் வகுப்பில் போட்டி இருந்ததும், இதனால் பாலமணிகண்டன் மீது மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வந்ததும், கலை நிகழ்சியில் பாலமணிகண்டனை பங்கேற்கவிடாமல் தடுக்கும் நோக்கில் விஷம் கலந்த குளிர்பானத்தை சகாயராணி விக்டோரியா வழங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, சகாயராணி விக்டோரியாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மோகன், குற்றம்சாட்டப்பட்ட சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் செல்வமுத்துக்குமரன் ஆஜாரானார்.