க்ரைம்

பண்ருட்டி அருகே பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டவர் கொலை: 2 பேர் கைது

ந.முருகவேல்

பண்ருட்டி அருகே பட்டாசு வெடித்ததைக் தட்டிக் கேட்டவரை கொலை செய்ததாக இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியும் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செம்மேடு கிராமத்தில், கலியமூர்த்தி மகன் வேலு(24) என்பவர் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடித்துள்ளார். அப்போது பட்டாசு பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. இதில் சூரியமூர்த்தி என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து ஓடியுள்ளது. இதையடுத்து சூரியமூர்த்தி, பட்டாசு சற்றுத் தள்ளி வெடிக்கச் செய்யலாமே என கேள்வி எழுப்பியதால், வேலு தரப்புக்கும்,சூரியமூர்த்தி தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூரியமூர்த்தி மகன் பார்த்தீபனும்(26) பட்டாசு வெடித்ததைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்பேது வேலு மற்றும் அவரது உறவினர் ராமர்(30) என்பவரும் சேர்ந்து பார்த்தீபனை கத்தியால் தாக்கியதில் அவர் பலத்தக் காயமைடந்துள்ளார். இதையடுத்து அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.தகவல் அறிந்த கடலூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜா மற்றும் போலீஸார் வழக்கில் சம்பந்தப்பட்ட வேலு என்பவர் நேற்று செம்மேடு பாலம் அருகில் பதுங்கி இருந்தவரை மடக்கி பிடிக்க முயன்றபோது, பாலத்தின் மேலிருந்து கீழே குதித்ததில் வலது காலில் பலத்தக் காயமடைந்துள்ளார். அவரைப் பிடித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய ராமர் என்பவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT