புவனேஸ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டம் நர்லா பகுதியை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் தினேஷ் அகர்வால்.
இவரது காரில் கடந்த 6-ம் தேதி ஒரு கடிதம் கிடந்தது. இதில் தன்னை நக்சலைட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ரூ.35 லட்சம் தராவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்று விடுவதாக மிரட்டியிருந்தார். இதுபோன்ற மிரட்டல் கடிதம் தினேஷ் அகர்வாலின் தொழில் கூட்டாளிக்கும் வந்தது. இதையடுத்து நர்லா காவல் நிலையத்தில் தினேஷ் அகர்வால் புகார் அளித்தார்.
விசாரணையில் தினேஷ் அகர்வாலை மிரட்டியவர் அவரது 24 வயது மகன் அங்குஷ் அகர்வால் தான் என்பதை அறிந்து போலீஸார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து பவானிபட்னா காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தேவரகொண்டா கூறுகையில், “அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதில் அனைத்து நக்சலைட் பெயர்களும் தவறாக இருந்தது. கடிதத்தின் உள்ளடக்கமும் முதிர்ச்சியற்றதாக இருந்தது. குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தான் அதை எழுதியிருக்க முடியும் எனத் தோன்றியது” என்றார்.