ராமேசுவரம்: இலங்கையின் தெற்கு கடல் பரப்பில் உள்ள இந்தியப் பெருங்கடலில் சில மூட்டைகள் மிதந்து வருவதை இலங்கை கடற்படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, 51 மூட்டைகளை கடற்படையினர் கைப்பற்றினர். அவற்றை தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர்.
அந்த மூட்டைகளில் 676 கிலோ மெத்தபெட்டமைன், 156 கிலோ ஹெராயின், 12 கிலோ ஹாஷிஷ் என மொத்தம் 844 கிலோ போதைப் பொருட்கள் இருந்தன. இவற்றின் சர்வதேச மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். இந்தப் போதை பொருட்களை கடத்தியவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.