க்ரைம்

தீபாவளி கொண்டாட வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞர் கைது @ சென்னை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தீபாவளி கொண்டாட பணம் தேவைப்பட்டதால், மூதாட்டி ஒருவரின் வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளை, ராகவா தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் தளத்தில் மகனுடன் வசித்து வருபவர் தேவகி (80). மூதாட்டியான இவர், கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாநகராட்சியில் இருந்து வருவதாக கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது சென்னையில் பல இடங்களில் கொசுத் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே, மருந்தடிக்க வேண்டும். அதற்காக இடம் பார்க்க வந்தேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர், பேசிக்கொண்டிருந்த படியே திடீரென வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி, மூதாட்டி தேவகி அணிந்திருந்த 2 வளையல்கள் மற்றும் 1 தங்கச் செயின் என சுமார் 5 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது தொர்பாக மகன் கண்ணனிடம் தெரிவித்தார். அவர் இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை பறித்து தப்பியது புரசைவாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மூதாட்டியின் நகை மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அருண் குமாருக்கு சரியான வேலை இல்லை என்பதும், தீபாவளி கொண்டாட பணம் இல்லாததால் மூதாட்டியை மிரட்டி நகையை பறித்து அந்த நகையை விற்று பணமாக்கி தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட அருண் குமார் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT