க்ரைம்

ரிதன்யா செல்போன்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவின்குமார் மற்றும் பெற்றோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது, வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப் பட்டதாகவும் அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யாவின் இரண்டு மொபைல் ஃபோன்களை ஆய்வு செய்ய காவல் துறையினரிடம் கூறியபோது அவர்கள் மறுத்து விட்டதாகவும் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் போனில் இருப்பதால் அந்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கவின் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மொபைல் போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT