மதுரை: மதுரை கோ.புதூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய மகன் யுவன் (15). இவர் மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், இவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளதுடன், அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் பெற்றோருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை பெற்றோர் கோயிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோ.புதூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் யுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.