சென்னை: பிரியாணிக் கடை உரிமையாளரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகர், புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரபு (35). கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் பிரியாணிக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கோயம்பேடு செல்வதற்காக கே.கே.நகர், வன்னியர் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் பிரபுவை வழிமறித்து பணம் கேட்டது.
அவர் கொடுக்க மறுத்ததால் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் தாக்கி, பிரபுவிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்து தப்பியது. தாக்குதலில் காயமடைந்த பிரபு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில் பிரபுவை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது கே.கே.நகர் 63-வது தெருவைச் சேர்ந்த அபிஷேக் (25), போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த நரேன் (25), தேனாம்பேட்டை திருவிக குடியிருப்பைச் சேர்ந்த பிரகாஷ் (43) என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட அபிஷேக், நரேன் ஆகிய இருவரும் கே.கே.நகர் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் பிரகாஷ் தேனாம்பேட்டை காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. அதோடு மட்டும் அல்லாமல் அபிஷேக், நரேன் மீது தலா 10 குற்ற வழக்குகள், பிரகாஷ் மீது ஏற்கெனவே 14 குற்ற வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.