புதுடெல்லி: உ.பி. அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்டே(50) எனும் அன்னபூர்ணா பாரதி. கல்லூரி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி வந்தார். பூஜாவிற்கு நிரஞ்சன் அகாடா, மகா மண்டலேஷ்வர் பட்டம் அளித்துள்ளது. பிறகு இந்து மகா சபாவில் இணைந்து அதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
அலிகரில் துறவி பூஜா நடத்திய ஆசிரமத்தின் நிர்வாகியும், நெருங்கிய சகாவுமாக இருந்தவர் அபிஷேக் குப்தா. தொழிலதிபரான இவர், இருசக்கர விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இருவருக்கும் இடையிலான நெருக்கம் விரோதமாகி மோதலானது. இச்சூழலில் அபிஷேக் கடந்த செப்டம்பர் 26 -ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைச் செய்த அலிகரின் பிரபல கிரிமினல்களான பைஸல் மற்றும் ஆசீப் மறுநாளே கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.3 லட்சம் பேசி அபிஷேக்கை கொல்ல உத்தரவிட்டது துறவி பூஜா மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே எனத் தெரிந்தது. அசோக் பாண்டே கைதாக, தலைமறைவான பூஜா குறித்து துப்பு அளிப்பவருக்கு ரூ.50,000 பரிசை அலிகர் காவல் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்த பூஜாவை அலிகர் போலீஸார் கைது செய்தனர்.