சென்னை: மதுரவாயலில் உள்ள பூங்கா மற்றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர் முனையில் பேசிய நபர், ``மதுரவாயல் பல்லவன் நகரில் உள்ள பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடிக்கும்'' எனக் கூறி இணைப்பைத் துண்டித்தார். காவல் கட்டுப்பாட்டறை போலீஸார் உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
2 இடங்களிலும் சோதனை: இதையடுத்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மிரட்டலுக்கு உள்ளான 2 இடங்களுக்கும் விரைந்து சோதனை நடத்தினர்.
முடிவில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக மிரட்டல் வந்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கப்பட்டது.
இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பூபதி (43) என்பது தெரியவந்தது. அவர் கூலி வேலை செய்து வருவதும், மது போதையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.