பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள கோயில் பகுதி. | படம்:மு.லெட்சுமி அருண் | 
க்ரைம்

தச்சநல்லூரில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் காவல் நிலையம் அருகிலும், கரையிருப்பு அருகே உள்ள காவல்துறை சோதனைச் சாவடி அருகிலும் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டுகள் வெடித்த இடங்களில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தச்சநல்லூர் போலீஸார் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு நடத்தினர்.

நேற்று முன்தினம் தச்ச நல்லூர் போலீஸார் ஊருடையான்குடியிருப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு மது அருந்திக் கொண்டு இருந்த 5 பேர் போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களில் 2 பேர் போலீஸாரிடம் சிக்கினர். அவர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கண்ணபிரான் என்பவரது ஆதரவாளர்களான ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த ஹரிகரன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பிச் சென்ற மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி, தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT