சென்னை: மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்து மிக்ஸி, கிரைண்டர் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை பேகம் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து, கடந்த 6-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளியின் சமையல் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, சமையல் கூடத்தில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், அலுமினிய டபராக்கள், தராசுகள் மற்றும் 4 எடைக் கற்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மஹ்பூர் ரஹ்மானி, ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (25), முத்தையா தோட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) என்பது தெரியவந்தது. இதை யடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், பள்ளியில் திருடிய மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.