க்ரைம்

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: ஓசூர் அருகே 4 பேர் உயிரிழப்பு

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் சரக்கு லாரி, இரண்டு கார்கள், பிக்கப் வேன், கண்டெய்னர் லாரி, ஈச்சர் லாரி என 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் பகுதியில் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து வருகின்றன. இன்று அதிகாலை 3 மணி அளவில் பேரண்டப்பள்ளி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றுள்ளன. அப்போது சரக்கு லாரி ஒன்று, முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளது.

அப்போது, கார் அதன் முன்னால் சென்ற பிக்கப் வாகனம் மீதும், பிக்கப் வாகனம் கண்டெய்னர் லாரி மீதும், அதன் முன்னாள் சென்ற மற்றொரு கார், ஒரு ஈச்சர் லாரி என அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக் குள்ளானது. இந்த நிலையில், சரக்கு லாரி மற்றும் பிக்கப் வேனுக்கு இடையே சிக்கிய கார் நசுங்கியது.

இதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அகிலன் (30) என்பதும் மற்றொருவர் பெங்களூரு சிக்க நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (27) என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இருவரின் விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT