பெசன்ட் நகர் கடலில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் 14 மாணவ- மாணவிகள், நேற்று காலை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில், கவி பிரகாஷ் (21), ரோகித் சந்திரன் (20), முகமது ஆதில் (20) ஆகிய மூன்று மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கடலில் தத்தளித்து கொண்டிருந்த கவி பிரகாஷ், முகமது ஆதில் ஆகிய இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கவி பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முகமது ஆதிலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடல் அலையில் சிக்கிய ரோகித் சந்திரன் மாயமானார். இது குறித்து, திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடலில் மாயமான ரோகித் சந்திரனை தேடி வருகின்றனர். இதுகுறித்து, சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.