மதுரை: மதுரை மாவட்டம் அருகே திருமால் கிராம குவாரி விவகாரத்தில் பாஜக நிர்வாகிக்கு சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கோரி மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் தமிழக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் தங்கத்துரை தலைமையில் அப்பிரிவு வழக்கறிஞர்கள் மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: “எங்களது கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், குடும்பத்தினருடன் விரகனூரில் வசிக்கிறார். திமுக கட்சி எம்எல்ஏ தளபதியின் மகன் துரை கோபால்சாமிக்கு பாத்தியப்பட்ட மதுரை மாவட்டம் திருமால் கிராமத்திலுள்ள உள்ள இடத்தில் அவரது உறவினர் சக்திவேல் என்பவர் உரிமம் பெற்று குவாரி நடத்தியுள்ளார். அந்த குவாரியில் விதிமீறல் இருப்பதை கண்டறிந்து அதனை சிவலிங்கம் தட்டிக்கேட்டுள்ளார். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று திரட்டி சிவலிங்கம் போராட்டமும் நடத்தியுள்ளார்.
தற்போது அக்குவாரியின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சிவலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு சில சமூக விரோதிகள் மூலம் ஆபத்து இருப்பதாக திருமால் கிராமத்தினர் சிலர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக சிவலிங்கம் வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு சென்று திரும்பும்போது, அவரை சந்தேகத்திற்குரிய நபர்கள் வாகனங்களில் பின் தொடர்வதாகவும் வீட்டின் அருகே மர்ம நபர்கள் அடிக்கடி செல்வதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித வழக்கு இல்லாத சூழலில், குவாரியை மூட காரணமாக இருந்த சிவலிங்கத்தை சமூக விரோதிகள் தாக்க முயற்சிக்கின்றனர். எனவே, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.