சென்னை: சமூகநலத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பெண் அதிகாரியின் ரூ.1.5 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகநலத் துறையில் இணை இயக்குநராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர் மேரி வர்க்கீஸ் (65). கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னை மாதவரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கொளத்தூரில் ரூ.1.5 கோடி மதிப்புடைய நிலம் இருந்தது. இதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேரிவர்க்கீஸ் புகார் தெரிவித்தார். இதன்படி உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடி புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி விசாரணை நடத்தினார்.
இதில் போலி ஆவணங்கள் மூலம் மேரி வர்கீஸ் நிலத்தை அபகரித்தது சென்னை கொளத் தூரைச் சேர்ந்த சீனிவாசன் (64), மணலியைச் சேர்ந்த இளஞ்செழியன் (50) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும், சீனிவாசன் கொளத்தூரில் சொந்த மாகத் திரையரங்கம் நடத்தி வருவதும், இளஞ்செழியன் ஸ்டீல் கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.