சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’இருமல் மருந்தை உட்கொண்ட மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த இருமல் மருந்துதான் காரணம் என்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, தங்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தமிழக அரசுக்குகடிதம் மூலம் வலியுறுத்தின.குழந்தைகள் உயிரிழப்பை அடுத்து, தமிழக அரசு ‘கோல்ட்ரிப்' மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்யத் தடை விதித்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டமாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு செய்து, மருந்து தயாரிப்புக்குப்பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை(75) மத்தியப் பிரதேச போலீஸார் சென்னை கோடம்பாக்கம், நாகார்ஜூனா நகர், 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர், அவரை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருந்து உற்பத்தி நிறுவன மேலாளர் ஜெயராமன், ஆய்வக ஆய்வாளர் மகேஷ்வரி ஆகியோரையும் கைது செய்தனர்.
2 பேர் சஸ்பெண்ட்: இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறும்போது, ‘‘ மருந்து நிறுவனத்தில் முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்காக மூத்த மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.