இடது: உறவினர்கள் போராட்டம் | வலது: உயிரிழந்த இளைஞர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
க்ரைம்

மதுரையில் போலீஸிடம் இருந்து தப்பிய இளைஞர் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு - உறவினர்கள் மறியல்

என்.சன்னாசி

மதுரை: மதுரையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய இளைஞரை துரத்தியதால் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். அவரை அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (31) மற்றும் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 பேரை அண்ணா நகர் போலீஸார் இன்று அதிகாலை பிடித்து புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு வாகனத்தில் போலீஸார் ஏற்ற முயன்றபோது தினேஷ்குமார் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார்.

போலீஸார் அவரை பிடிக்க துரத்தியபோதும் அவர் அருகிலுள்ள வண்டியூர் உபரிநீர் செல்லும் கால்வாயில் குதித்ததில் உயிரிழந்ததாக தெரிகிறது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ்குமாரை அடித்துக் கொன்றதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையம் முன் நேற்று உறவினர்கள் சாலைமறியல் ஈடுபட்டனர். பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது: “கால்வாயில் குதித்த தினேஷ்குமாரை போலீஸார் தேடியும் கிடைக்காததால், வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என கருதினர். வீட்டில் கேட்டபோது அவர் வரவில்லை என பெற்றோர் தெரிவித்தனர். இதன்பின் தப்பியோடிய கால்வாயில் தேடியபோது சேற்றுக்குள் சிக்கி அவர் உயிரிழந்தது தெரிந்தது. தினேஷ்குமாரை போலீஸார் தாக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் உள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரிந்துவிடும்” என்றனர்.

தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் கூறுகையில், “தினேஷ்குமார் மீது ஓரிரு வழக்குகள் உள்ளன. தற்போது, அவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இன்று அதிகாலை தினேஷ்குமாரை போலீஸார் அழைத்துச் சென்றனர். மதியம் சுமார் 1 மணிக்கு கால்வாயில் தினேஷ்குமார் விழுந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். தப்பிப்பதற்காக கால்வாயில் குதித்தபோது உயிரிழந்ததாக போலீஸார் நாடகமாடுகின்றனர். கால்வாய் தண்ணீர் இல்லை. எனது ஒரே மகனை போலீஸார் அடித்துக் கொலை செய்துள்ளனர். போலீஸார் மீது வன்கொடுமை கொலை வழக்குப் பதிய வேண்டும். இல்லாவிடில் உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

SCROLL FOR NEXT