க்ரைம்

சென்னை | ஓட்டுநரை கத்தியால் தாக்கி ஆட்டோவை கடத்திச் சென்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, அண்ணாசாலை, கே.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் தீபக் (24). வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே புதுப்பேட்டை, ஆதித்தனார் சாலை அருகில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தீபக்கை வழிமறித்து தாக்கி, பணம் கேட்டுள்ளனர்.

கொடுக்க மறுக்கவே அவரை கத்தியால் தாக்கி, சட்டை பையில் வைத்திருந்த பணம், செல்போன் மற்றும் ஆட்டோவையும் பறித்துக் கொண்டு, அதே ஆட்டோவில் தப்பினர். இது தொடர்பாக, எழும்பூர்காவல் நிலையத்தில் தீபக் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை பகுதியைச் சேர்ந்த சாரதி கண்ணன் என்ற ஜனா (22), அதே பகுதி அய்யாசாமி தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்ற தியாகு (28) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும், போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சாரதி கண்ணன் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உட்பட 3 குற்ற வழக்குகளும், தியாகராஜன் மீது ஒரு குற்ற வழக்கும் உள்ளது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT