க்ரைம்

சென்னை: போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பண மோசடி; புது மாப்பிள்ளை கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, கிரிக்கெட் வீரர் பெயரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் பறித்த புது மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா (38). கடந்த ஜுன் மாதம் இவரது இன்ஸ்டாகிராம் வலைதள கணக்குக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் பாபா இந்திரஜித் பெயரில் உள்ள கணக்கிலிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு இருவரும் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர். செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளனர்.

அப்போது, அந்த நபர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக உள்ளேன். எனக்கு நிறைய செல்வாக்கு உள்ளது. நான் நினைத்தால் உங்களுக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதை செயல்படுத்த சிறிய அளவு பணம் தேவைப்படும் என தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய கீதா, அரசு வேலை பெற்றுத் தர முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர், பாபா இந்திரஜித் பெயரில் தொடர்பு கொண்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதா இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி, கீதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று மோசடி செய்தது சென்னை ஒட்டியம்பாக்கம், காரணை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த ராகுல் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பண மோசடி செய்தது ஏன்?: ராகுல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் வீட்டில் தாயாருக்கும், குடும்பத்துக்கும் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனால், அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. உடனடியாக பணம் சம்பாதிக்க முடியாது என நினைத்து பிரபலங்கள் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்களை உருவாக்கி, பணம் மோசடி செய்தேன் என ராகுல் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT