க்ரைம்

திருச்சி | 10 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல தங்க நகை விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளான குணவந்த், மகேஷ் ஆகியோர் கடந்த செப்.8-ம் தேதி தங்க நகைகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புறப்பட்டனர்.

திண்டுக்கல்லில் விற்பனையை முடித்த பின், 3 பேரும் மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் செப்.13-ம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் சென்றபோது அவர்களை மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், குணவந்த், மகேஷ், பிரதீப்கான் ஆகியோர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரகுராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், கார் ஓட்டுநர் பிரதீப்கான் யோசனைப்படி, ராஜஸ்தானை சேர்ந்த அவரது நண்பர்கள் 6 பேர் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரதீப்கான் உட்பட ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அடுத்தடுத்து பல்வேறு நபர்களிடம் கைமாறி, இறுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மங்கிலால் தேவாசி, விக்ரம்ஜாட் ஆகியோரிடம் இருப்பது தெரியவந்தது. அவர்களை செல்போன் எண்ணை வைத்து போலீஸார் கண்காணித்தபோது அவர்கள் மும்பையில் இருந்து ஆக்ரா நோக்கி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேச மாநிலம் வழியாக பேருந்தில் நகைகளுடன் தப்பிக்க முயன்ற மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட்இருவரையும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ 432 கிராம் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT