சென்னை: சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் முயற்சியை முறியடித்த தமிழக சைபர் க்ரைம் போலீஸார், டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்திய 44 சிம் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.
அண்மைக்காலமாக மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் பேசுவதுபோல் போனில் பேசி, ‘உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு உள்ளது. அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும்.
மறுத்தால் வீடு தேடி வந்து கைது செய்வோம். உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்’ என மோசடி கும்பல் மிரட்டுகிறது. மிரட்டலுக்குப் பயந்து பலர் பணத்தை இழந்து, ஏமாந்து விடுகின்றனர். அந்த வகையில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கூடுதல் டிஜிபி உத்தரவு: இதுபோன்ற மோசடிக்கு சிம் பாக்ஸ்-கள் (பல சிம் கார்டுகளை கொண்ட ஒரு தொலைத்தொடர்பு சாதனம்) பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் உத்தரவிட்டார்.
வருவாய் இழப்பு... அதன்படி, போலீஸார் தமிழகம் முழுவதும் சோதனையிட்டனர். மேலும், சிம் பாக்ஸ் குறித்து விசாரித்தனர். இந்த சிம் பாக்ஸ்கள் வெளிநாட்டிலிருந்து வரும் சர்வதேச அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி விடும் தன்மை கொண்டது. இதன் மூலம் அழைப்புக் கட்டணம் மிகவும் குறையும். இதனால், டெலிகாம் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், சட்ட விரோத செயல்களுக்கும் இந்த சிம் பாக்ஸ்களை பயன்படுத்த முடியும். அதன் அடிப்படையிலேயே மோசடிக் கும்பல் இந்த சிம் பாக்ஸ்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிம் பாக்ஸ் தொடர்பாக தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2 மாதங்களில் 44 சிம் பாக்ஸ்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், டெல்லி, பிஹார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றும் சிம் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல், டெல்லியில் தாரிக் அலாம் (19), அவரது கூட்டாளி லோகேஷ் குமார் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு சைபர் மோசடி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பலரை மோசடி செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.