க்ரைம்

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் விபத்து: பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் உள்ள சி.எஸ்.கே பட்டாசு கடையில் ஞாயிறு காலை ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வீணானது.

சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில் அனுப்பன்குளம் அருகே மயிலாடுதுறை கிராமத்தில் சி.எஸ்.கே கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். ஞாயிறு காலை வழக்கம் போல் கடையைத் திறந்து தொழிலாளர்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.

காலை 11 மணி அளவில் பட்டாசுக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். சிறிது நேரத்தில் பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. தகவலறிந்து 3 வாகனங்களில் வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சாலை ஓரத்தில் கடை உள்ளதால் சிவகாசி - சாத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT