க்ரைம்

‘ஈகோ’ மோதல்: சென்னையில் ரவுடியை கொலை செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுவண்ணாரப்பேட்டையில் யார் பெரிய ஆள் என்ற மோதலில், ரவுடி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புதுவண்ணராப்பேட்டை, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் என்ற மயாண்டு (20). இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளது. போலீஸாரின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் அவர்கள் ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை அசோக்நகர் முதல் தெரு, வீரராகவன் தெரு சந்திப்பிற்கு எதிரே உள்ள காலியிடத்தில் மனோஜ் குமார் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது, அந்த ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், மனோஜ்குமார் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து மனோஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சி பிரிவு ரவுடி சஞ்சய் (22), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (22), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தேவ பிரசாத் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT